சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் உயர் ரக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சென்னை விமான நிலைய ஏர் இன்டெலிஜென்ஸ் (Air Intelligence) அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, வட மாநில பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், அவரிடம் விசாரணை செய்த போது அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்திருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவரது ட்ராலி பையின் அடிப்பகுதியில் இருந்த ரகசிய அறைக்குள் சில பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்த போது அதற்குள் ஹைட்ரோபோனிக் (Hydroponic) எனப்படும் உயர் ரக கஞ்சா என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்புச் சட்டம், சுங்க சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனால், வட மாநில நபரை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கும்பலின் முக்கிய புள்ளிகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





கருத்துக்கள்