நீதி வென்றது- முன்னாள் சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சி
சென்னை: கடந்த 2016-ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணக்கை முடிவில் அப்பாவுவை எதிர்த்து போட்டியிட்ட இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்பதுரையின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 19, 20, 21 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். தபால் வாக்குகளில் 203 வாக்குகளை காரணங்கள் இன்றி தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துள்ளார். அதையும் சரிபார்த்து முடிவை அறிவிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை வழக்குகள் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், வாக்கு எண்ணிக்கையை தொடர அனுமதித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.கடந்த 2019-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒரே விஷயத்துக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? தற்போது வரை 3 தேர்தல்கள் முடிந்துவிட்டன. ஒரு தேர்தல் வழக்கை 10 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்க முடியுமா? தபால் வாக்குகள் நிராகரித்ததில் தேர்தல் அதிகாரி குறித்து ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டது. மேலும், விசாரிக்க எதுவும் இல்லை.
இன்பதுரையிடம் இருந்து 2016-21 வரை பெற்ற சம்பளத்தை திரும்ப வசூலிப்பது என்பது முடியாத காரியம். அவர் சட்டமன்ற உறுப்பினராக ஏற்கெனவே தனது பணியை செய்துள்ளார். ஓய்வூதியம் மற்றும் பிற பலன்களை அனுபவிக்க வேண்டுமானால் தடைவிதிக்கலாம். பதவி நீக்கமும் செய்ய முடியாது.
மறு வாக்கு எண்ணிக்கையில் 203 மொத்த தபால் வாக்குகளில் 153 வாக்குகள் அப்பாவுக்கு சாதகமாக விழுந்துள்ளன. 44 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இன்பதுரை வெற்றி பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 2016-2021 காலகட்டத்திற்கான பண பலன்களை அப்பாவுக்கு வழங்க வேண்டும். அவருக்கான அனைத்து சலுகைகளையும் சட்டப்பேரவை செயலாளர் உறுதிபடுத்த வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "நீண்ட சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருந்தேன். நல்ல ஒரு தீர்ப்பு கிடைத்துள்ளது. தாமதமாக கிடைத்தாலும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. கலைஞர் (கருணாநிதி) பிறந்தநாளில் இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.





கருத்துக்கள்