advertisement

விலைவாசி உயர வாய்ப்பு -விக்கிரமராஜா பேட்டி !

மார். 12, 2026 11:39 முற்பகல் |

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விலைவாசி உயரும் வாய்ப்பெனவும்,வணிகர்கள் அதிக அளவில் வரி கட்டுகின்றனர் என விக்கிரமராஜா தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43 - வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் , ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுகுழுக் கூட்டம் பரமக்குடி புறநகர் பகுதியான சரசுவதி நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜீவானந்தம், பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவரும், மாவட்ட துணைத் தலைவர் ராசி என். போஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கெளரவத் தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர்கள்  சங்க பேரவை அமைப்பின் அனைத்து இணைப்பு சங்கங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் மாவட்டம், நகர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.        தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் ஏ.எம்.
விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
     அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் தரப்பிலிருந்து பாரத பிரதமருக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளோம். அதே நேரத்தில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். உடனடியாக தீர்வு காணுவதாக கூறியுள்ளனர். 
       சென்னையில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க பேரமைப்பு சங்கங்களுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக உணவு பொருட்கள் வகைகள் தயாரிப்பு குறைந்துள்ளது. 40 உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 20 உணவுப் பொருட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம்தான் சிலிண்டர் பயன்பாடு இருக்கும். விறகு அடுப்பு, விறகு கரிகள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
   ஹோட்டல்களில் அரிசி சாதம், இட்லி உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும். தோசை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது. ஹோட்டல்கள் விடுமுறை என்ற செயல்பாட்டை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
       தற்போது வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்வதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்தாலே போன் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர். அரசாங்கத்தை குற்றம் கூறவில்லை, போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      வணிக பயன்பாடு சிலிண்டர் உயர்வால் டீ, காபி உள்ளிட்டவை ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் உயர்த்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கிலோவிற்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கட்டாயம் விலைவாசி உயரும். வணிகர்கள் அதிக அளவில் வரி கட்டுகின்றனர். தற்போது ஒரு லட்சம் கோடியில் இருந்து 2 லட்சம் கோடி வரை வணிகர்கள் வரி கட்டி வருகின்றனர்.
       அதே போல் , மக்கள் வீடுகளில் வெரைட்டி உணவுகளை தயார் செய்து சிலிண்டர்களை வீணாக்காமல் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் தயார் செய்ய பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும். ரமலான் நோன்பு, கோயில் அன்னதானங்களில் விறகு அடுப்புகளில் உணவுகளை தயார் செய்ய தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
     அதுசமயம், வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜீவானந்தம், பரமக்குடி வியாபாரிகள் சங்க தலைவரும், மாவட்ட  துணைத் தலைவர் ராசி என். போஸ் உள்பட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
        
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement