தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள்- இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்க மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறதென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது : தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் , பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப் பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும்/அல்லது அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல், சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.
விண்ணப்ப பதிவு நடைமுறை டென்பிநெட் இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு , தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் டென்பிநெட் தலைமையகத்தால் பணி ஆணை வழங்கப்படும்.
மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களுக்கான டென்பிநெட் இணையதள போர்டல் 10.03.2026 முதல் 10.04.2026 வரை மீண்டும் செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்