advertisement

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத் தளத்தை அமைச்சர் ஶ்ரீநாத் ஆய்வு .

ஜூலை 20, 2026 9:23 முற்பகல் |

 

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ரோசிமாநகர் மீனவ கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், தமிழ்நாடு மீன் வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரோச்மாநகர் மீன் இறங்குதள மேம்பாட்டுப் பணிகள் , மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத் தளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மீன் வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசியதாவது :    கடலாடி வட்டத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ரோச்மாநகர் மீனவ கிராமம், கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை  சந்திப்பிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலும், சாயல்குடி நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும், 78 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரோச்மாநகர் மீன் இறங்குதளத்தில் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்த்தும் தளங்கள் , கிராமத்தின் தெற்குப் பகுதியில் அலைத் தடுப்புச் சுவர்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. இருப்பினும், கடுமையான கடல் அரிப்பின் காரணமாக இவ்வசதிகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதுடன், புயல் காலங்களில் கடல் நீர் மீனவக் குடியிருப்புகளுக்குள் புகும் நிலையும் உருவாகியது.
இதனால், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீனவக் குடியிருப்புகளை கடல் சீற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கும், தற்போதுள்ள அலைத் தடுப்புச் சுவரை தூண்டில் வளைவு  வடிவில் நீட்டித்து அமைக்க வேண்டும் என மீனவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்ததையொட்டி, மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் ரோச்மாநகர் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் 367 மீட்டர் நீளத்தில் பிரதான தூண்டில் வளைவு நீட்டித்தல், 1,286 மீட்டர் நீளத்தில் துணை தூண்டில் வளைவு அமைத்தல் மற்றும் 9 மீட்டர் × 6 மீட்டர் அளவில் வலை பின்னும் கூடம் கட்டுதல் உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பணிகள் தற்போது பிரதான தூண்டில் வளைவின் 367 மீட்டர் நீட்டிப்புப் பணிகள் நிறைவடைந்து, கற்கள் அடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காற்று வீசும் திசைக்கு எதிர்ப்புறத்தில் அமைக்கப்படும் துணை தூண்டில் வளைவின்  பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வலை பின்னும் கூடத்தின் கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
          ஒட்டு மொத்தமாக திட்டப்பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, 15.08.2026-க்குள் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையொட்டி, தமிழ்நாடு மீன்வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் பணிகளின் தரம் , முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
       முன்னதாக கடலாடி ஊராட்சி ஒன்றியம், மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகத் தளத்தை பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நேர்க்கல் சுவரை தெற்கு பகுதியில் 300 மீட்டரும், வடக்கு பகுதியில் 150 மீட்டரும் நீட்டிப்பு செய்து அந்த பகுதியை ஆழப்படுத்த மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை  தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்றி தருவதாக தமிழ்நாடு மீன் வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்  தெரிவித்தார்.
       ஆய்வின் போது , மீன் வளம் , மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் , உதவி பொறியாளர் விக்னேஸ்வரன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட மீன் வளத்துறையினர் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement