உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி கார் மோதி விபத்து - மூவர் பலி!
உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று தார் லோடு ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி சென்றது. இந்த லாரியை துரைராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியன் மகாதேவி பகுதியின் வழியாக சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை - சேலம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது துரைராஜ் லாரியை இடதுபுறமாக திருப்பினாராம்.
அப்போது கடலூர் பாதிரிக்குப்பத்தில் இருந்து சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று, டேங்கர் லாரியின் பின்பக்கம் மோதியதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சூரியகுமார், சந்தோஷின் பெரியம்மா பாக்கியலட்சுமி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தின் காரணமாக உளுந்தூர்பேட்டை - சேலம் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விபத்து பகுதியை பார்வையிட்டதோடு, விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடர்பாடுகளில் சிக்கி இருந்ததால் அவற்றை மீட்க உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன இயந்திரம் மூலம் நொறுங்கிய காரின் பாகங்களை அப்புறப்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.





கருத்துக்கள்