நாகர்கோவிலில் மாநில அளவிலான செஸ் போட்டி: 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வம்
நாகர்கோவில், சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியும், சேலஞ்ச் செஸ் அகாடமியும் இணைந்து மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்தின. பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகள் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்பட்டன. மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்தி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடும் போட்டிக்கு இடையே சிறப்பாக விளையாடிய 175 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.
முன்னதாக, போட்டியை கல்லூரிமுதல்வர் முனைவர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். போட்டிகள் நிறைவடைந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரெக்சின் தஷ்னேவிஸ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் முகம்மது அபுபக்கர் சித்திக். முனைவர் புகழேந்திர சோழன்.முனைவர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் வாழ்த்தினர். செஸ் அசோசியேஷன் செயலாளர் டாக்டர் வின்ஸ்டன் போட்டி அறிக்கை வாசித்தார். முன்னதாக முனைவர் விக்னேஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இந்தப் போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை சேலஞ்ச் செஸ் அகாடமியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் கல்லூரி விளையாட்டு குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.





கருத்துக்கள்