நாகர்கோவில் : காவல் ஏஐ திட்டம் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 இடங்களில் "KAAVAL AI – Automatic Traffic Violation Detection System" திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.
"ZERO ACCIDENT KUMARI" என்ற இலக்கை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், தலைமையில், சாலை விபத்துகளை குறைத்து பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த 08.06.2026 அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த சந்திப்பின் நான்கு திசைகளிலும் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன AI கேமராக்கள், போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டறிந்து கண்காணித்து வருகின்றன.
இந்தத் திட்டம் பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும் பழக்கத்தையும் அதிகரித்துள்ளது. இதுவரை 4,868 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, விதிகளின்படி அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதன் பலனாக, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இன்று 29.07.2026 அன்று மாவட்டத்தின் மேலும் 10 முக்கிய இடங்களில் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
புதியதாக இந்த AI கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள இடங்கள்:
- வடசேரி
- அப்டா மார்க்கெட்
- பார்வதிபுரம்
- செட்டிகுளம்
- அஞ்சுகிராமம்
- விவேகானந்தபுரம்
- கருங்கல்
- அழகிய மண்டபம்
- திருத்துவபுரம்
- தக்கலை
வடசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த AI அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் (Vehicle Registration Numbers) உடனுக்குடன் டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்படும். மேலும், விதிமீறலின் தன்மைக்கேற்ப தானியங்கி முறையில் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் KAAVAL AI திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய சென்னை ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.





கருத்துக்கள்