பெண்புலிகளாக இணைந்து செயல்படுவோம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு
மக்கள் நலனுக்காக நானும் கீர்த்தனாவும் பெண்புலிகளாக இணைந்து செயல்படுவோம் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ச.கீர்த்தனா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர். மாவட்டம் முழுது. 3901 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.விழாவில் பேசிய அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, "கீர்த்தனா எனக்கு சக அமைச்சர் மட்டுமல்ல; உடன்பிறவா சகோதரி. அப்படித்தான் நாங்கள் பழகி வருகிறோம். எனது தங்கை கீர்த்தனாவின் சிறப்பான செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாகவே அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் இல்லை. ஒரே அணியாக, ஒரே குடும்பமாக மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம். விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் இருவரும் பெண் புலிகளாக களத்தில் பணியாற்றுவோம். கட்சி பாகுபாடு இன்றி மாவட்ட வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.,க்களுடன் இணைந்து செயல்படுவோம். மக்கள் நலன் என்பதையே முதன்மையாகக் கொண்டு, அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா பேசுகையில், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவதற்கும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், என்ற உறுதியை வெளிப்படுத்தினார். இரு அமைச்சர்களின் ஒற்றுமை மற்றும் மக்கள் நல அணுகுமுறைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன்பு சிவகாசியில் வெடி விபத்தில் உயிரிழந்த 5 குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிய நிவாரணத்தொகை ரூ. 4 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.





கருத்துக்கள்