தாம்பரத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறித்தவர் கைது
தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் நாயக் (28), என்பவர் தனது மனைவியுடன் திருச்சியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இரண்டு மாதங்கள் வேலை செய்தும் ஊதியம் வழங்கப்படாததால் இருவரும் அசாம் செல்ல முடிவு செய்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர்.போதையில் இருந்த அஜய் நாயக், மனைவியை தாம்பரம் நிலையத்தில் அமர வைத்துவிட்டு சானடோரியம் ரயில் நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சானடோரியத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில் பயணம் செய்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா (26) என்பவரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார்.இதில் ரயில் மெதுவாக சென்றதால் பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அஜய் நாயக்கை மடக்கிப் பிடித்தனர். செல்போனை மீட்க முயன்றபோது, ரயிலில் இருந்து இறங்க முயன்ற அடோலின் பிரபா தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த ரயில்வே போலீஸார் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தலையில் 20 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அஜய் நாயக்கை கைது செய்தனர்





கருத்துக்கள்