advertisement

அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு: முதியவர் தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவால் அதிரடி

ஜூலை 29, 2026 11:47 முற்பகல் |

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வீடு புகுந்து முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, போதைக்கு அடிமையான நபர் மற்றும் அரசு ஊழியர் உட்பட 3 பேர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் பட்டாரியார் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகள் ஆயிஷாவிற்கும், பேபிவாட்ச் கடை உரிமையாளரான முகமது பெரோஸ் என்பவரின் வளர்ப்பு மகனான அப்துல்லா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்துல்லா மிகவும் விலை உயர்ந்த மற்றும் அபூர்வமான போதைப் பொருட்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது இந்த தீவிர போதைப் பழக்கம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஆயிஷா தனது கணவரைப் பிரிந்து தனது இரண்டரை வயது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத அப்துல்லா, மனைவியின் வீட்டிற்குச் சென்று காஜா மொய்தீன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையாகத் தாக்கியுள்ளார். இதை அறிந்து அங்கு வந்த பெரோஸும் தனது மகனுடன் சேர்ந்து அந்த குடும்பத்தினரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் வசித்து வரும் அரசு ஊழியரான அமான் என்பவரும் அப்துல்லா மற்றும் பெரோஸ் ஆகியோருக்குத் துணை நின்று காஜா மொய்தீனைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் காஜா மொய்தீன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலம் சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தும், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்..இதனால் காஜா மொய்தீன், வழக்கறிஞர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார்.

இந்த வழக்கை (WP CRL.(MD). No.3461 of 2026) விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, கோட்டார் காவல்துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, கடந்த 27.09.2025 அன்று காஜா மொய்தீன் அளித்த புகாரை மீண்டும் கையில் எடுத்து, BNSS சட்டப்பிரிவு 64-ன் கீழ் இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அப்துல்லா, பெரோஸ் மற்றும் அரசு ஊழியரான அமான் ஆகிய 3 பேர் மீதும் கோட்டார் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement