தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் இரண்டு கொலை என வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் மேலும் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அதுகுறித்து உண்மை தன்மை தெரியாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 19.05.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பல்க் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் Cr. No. 444/25 u/s. 194(3), (iv) BNSSன்படி சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இறந்த நபர் கோவில்பட்டி லிங்கம்பட்டியைச் சேர்ந்த சோனமுத்து மகன் முருகன் (50) என்பதும் அவரை சம்பவ இடத்தில் ஒரு கார் இடித்து விட்டு விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
அதேபோன்று கடந்த 19.05.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமைகுடில் அருகே காரில் எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மேற்படி இறந்த நபர் குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிப்காட் காவல் நிலைய வழக்கில் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அது விபத்தால் நிகழ்ந்த மரணம் என்பதும் மற்றும் முறப்பநாடு காவல் நிலைய வழக்கில் சந்தேகம் மரணத்தின் அடிப்படையில் தற்போது வரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு இரண்டு நாட்களில் இரண்டு கொலை என பல்வேறு பத்திரிக்கை மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்துக் கொள்கிறது. எனவே மேற்படி வழக்குகளில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்