திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேர விவகாரம்: உச்சநீதிமன்றம் கருத்து
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை 12.05 முதல் 12.45 மணிக்குள் என நிர்ணயிக்கும்படி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் ஆகியோர் விசாரித்து சபரிமலை அய்யப்பன் கோவிலின் மேல்சாந்தி, திருச்செந்தூர் கோவில் ஸ்தானிகர், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் கோவில் ராஜா குருக்கள் மற்றும் மனுதாரர்கள் கொண்ட குழுவினர் இணைந்து திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உகந்த நேரம் எது? என ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சிவசுப்பிரமணிய சாஸ்திரிகள் சார்பில் வக்கீல் ஏ.கார்த்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. உடனே நீதிபதிகள் இந்த வழக்கின் பின்னணியை விரைவாக கேட்டறிந்தனர்.
மனுதாரர் சிவசுப்பிரமணிய சாஸ்திரிகள் சார்பில் மூத்த வக்கீல் பர்மேஷ்வர் ஆஜராகி, வழக்கு கடந்து வந்த பாதையை குறிப்பிட்டு, முதலில் பஞ்சாங்கம் வெளியாகாத நிலையில் ஒரு நேரத்தை அளித்ததாகவும், பஞ்சாங்கம் வெளியான நிலையில் மற்றொரு நேரத்தை அளித்ததாகவும், தனது கருத்து ஏற்கப்படவில்லை என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை விரிவாக விசாரித்து தீர்ப்பு கூறியுள்ளது. குறிப்பாக ஐகோர்ட்டு அமைத்த நிபுணர் குழுவில் மனுதாரரும் இடம் பெற்றதை சுட்டிக்காட்டினார்.
கருத்துக்கள்