advertisement

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள் முன்பதிவு ஆரம்பம்

ஜூலை 04, 2025 4:04 முற்பகல் |

 

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.

இந்த சிறப்பு ரயில் வண்டி எண் 06089 சென்னை எழும்பூரில் இருந்து வரும் 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் 7ந் தேதி திங்கள்கிழமை காலை 9:15 மணிக்கு நெல்லை வந்தடையும். பின்னர் இங்கிருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று வெள்ளிக்கிழமை 4-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement