ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி துவக்கம்
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கான பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இன்று தேசிய மீன்வளர்போர் தினத்தை முன்னிட்டு நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கான பணிகளை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து, பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் 40 இலட்சம் மீன்குஞ்சுகள் ரூபாய் 120 இலட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மணிமுத்தாறு அரசு மீன்குஞ்சு உற்பத்தி மையத்தில் வளர்க்கப்பட்ட 8-10 செமீ அளவுள்ள 1.00 இலட்சம் மீன்விரலிகள் இன்றையதினம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் இருப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், மீன்வளத் துறை மூலம் உள்நாட்டு மீனவர்களை பாதுகாக்கின்ற விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் "அலைகள் திட்டம்" வாயிலாக மீனவ மகளிர் வாழ்வாதாரத்தினை உயர்த்திட தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி சார்ந்த 9 மகளிர் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு முன்கடனாக தலா ரூ.25,000/- மற்றும் கடல்சார் கல்வி பயிலும் மீனவ மாணவர்களுக்கு கல்வி பயிலும் ஊக்கத் தொகையாக ரூ.1,25,000/- க்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மீன் மற்றும் கடல்பாசி உற்பத்தியினை பெருக்குவதற்கு சிறப்பாக பங்களித்த மீன்/கடற்பாசி வளர்ப்போருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ந.சந்திரா, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ,புஷ்ரா ஷப்னம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர்கள் வெ.தீபா, மோகன்ராஜ், உள்நாட்டு மீனவ பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்