தூத்துக்குடியில் கார் கம்பெனி திறப்பு ,இழப்பு மக்களுக்கே : சுப. உதயகுமாரன் அறிக்கை
தூத்துக்குடியில் கார் கம்பெனி திறக்கப்பட்ட நிலையில் இதன் இழப்பு அனைத்தும் தூத்துக்குடி மக்களுக்கே என பச்சைதமிழகம் அமைப்பு நிறுவனர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், பிணம் தின்றுதானே ஆக வேண்டும்? நான்கு வழிச்சாலை ((4-lane highway), எட்டு வழிச்சாலை (8-lane highway), விரைவுச் சாலை (express highway), சுற்றுச் சாலை (ring road), தொழிற்பகுதி இணைப்புச் சாலை (industrial corridor), இராணுவச் சாலை (defence corridor) என்று நாடெங்கும் சாலைகள் பரந்து விரிந்தால், அவற்றின்மீது ஓடுவதற்கு வாகனப் பெருக்கமும் வந்தாகத்தானே வேண்டும்? அப்படியானால் நான்கு சக்கர வாகனங்கள் பல்கிப் பெருகுவது இயல்பானதுதானே?
இன்றையக் காலக்கட்டத்தில், கார் என்பது தனிமனிதச் சுதந்திரத்தை, சமூக அந்தஸ்தை, முன்னேற்றத்தை, முக்கியத்துவத்தை குறிக்கும் ஓர் இன்றியமையாதப் பொருளாதார-கலாச்சார அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. வாகனங்கள் இருப்பதால் வசதியுடையவர்கள் நகர நெருக்கடிகள், அல்லல்களைத் தவிர்க்க, புறநகர்ப் பகுதிகளில் புகலிடம் தேடுகின்றனர். கார்களால் வாழ்க்கைத்தரம் உயருவதாக உணரப்படுகிறது.
இம்மாதிரியான அமைப்பினால்தான் “அமெரிக்காவில் கால் இல்லாமல் வாழலாம், கார் இல்லாமல் வாழ முடியாது” என்பார்கள். இந்த அமெரிக்கச் சூரியனைச் சுற்றிச்சுழலும் உலகமய காலனித்துவ அமைப்பில், ஒட்டுமொத்த உலகமுமே மேற்குறிப்பிட்ட வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தனியார் வாகனங்கள் தறிகெட்டுப் பெருகிக் கொண்டிருக்கின்றன, பொதுப் போக்குவரத்து நலிவடைகிறது; எரிபொருள் செலவு எகிறிக் கொண்டிருக்கிறது.
கார்கள் உமிழும் கரியமில மாசுக்களால் காற்று மாசுபடுகிறது, புவி வெப்பமடைகிறது, காலநிலை மாறுகிறது, கடல்மட்டம் உயருகிறது, அமைதிக் கெடுகிறது என்றெல்லாம் கவலைகள் எழுகின்றன. காலனித்துவ, முதலாளித்துவ வளர்ச்சிச் சித்தாந்தம் ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையாக மாற்றிவிட மட்டுமே எத்தனிக்கிறதே தவிர, அந்தப் பிரச்சினைக்கான மூலாதரத்தைத் தேடி, நிரந்தரத் தீர்வுகாண விழைவதில்லை. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவோம், தனியார் வாகனங்களைக் குறைப்போம், எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்துவோம், மாசுபடுத்தலைத் தவிர்ப்போம் என்றெல்லாம் சிந்திக்காது, கார்பன் உமிழாக் கார்களை உருவாக்குவோம் என்று களமிறங்குகிறது காலனித்துவ வளர்ச்சி.
பணத்தை விதைத்து, அதிகப் பணத்தை அறுவடை செய்ய விரும்பும், முதலாளித்துவ அமைப்பு அப்படித்தானே இயங்கும்? அபரிமிதமானச் சாலைகளால் விளைநிலம் வீணாகிறதே என்றோ, அத்தியாவசியமற்றப் பயணங்களால் சுற்றுச்சூழல் அழிகிறதே என்றோ இந்த அமைப்புமுறை கவலை கொள்ளாது. மாறாக, விதவிதமாய் கார்களை உற்பத்திச் செய்யுங்கள், அதிகமாக அவற்றை வாங்குங்கள், அடிக்கடி கார்களை மாற்றுங்கள், கார் சார்ந்த தொழில்களைத் தாறுமாறாக வளர்த்தெடுங்கள் என்றே செயல்படுகிறது. காற்று, தண்ணீர், மண் போன்றவை மாசுபடுகின்றனவே என்று கேள்விகள் எழுப்புவது உங்களை வளர்ச்சிக்கு எதிரான மாவோயிஸ்ட், நகர்ப்புற நக்சல், இந்தியாவுக்கு எதிரான அந்நியநாட்டுக் கைக்கூலி என்றெல்லாம் அடையாளப்படுத்தும்.
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் (VinFast) கார் தொழிற்சாலை இன்னொரு மாயாஜால வித்தைதான். பாம் நாட் வோங் (Phạm Nhật Vượng) எனும் வியட்நாம் நாட்டு பெருமுதலாளி ஒருவரால் 2017-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘வின் க்ரூப்’ எனும் நிறுவனம் தயாரிக்கும் கார்தான் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் ரூ.16,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 400 ஏக்கர் நிலத்தில் உருவாகும் இந்த கார் தொழிற்சாலையில் 3,000 முதல் 3,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இங்கே தயாரிக்கப்படும் கார்கள் விற்பனையாகும்.
இந்நிறுவனம் தூத்துக்குடியில் முதற்கட்டமாக 50,000 VF-6, VF-7 மின்சாரக் கார்களை (பாகங்களை இணைத்து) உருவாக்கும் பணிகளைத் தொடங்குகிறது. இரண்டாம் கட்டமாக 150,000 மின் வாகனங்களை தூத்துக்குடியிலேயே தயாரிக்கவிருக்கிறது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பொருளாதாரம் மேம்படும், வேலைவாய்ப்புக்கள் உருவாகும், தமிழக மக்களின் தொழிற்நுட்பத் திறன் பெருகும் என்றெல்லாம் தமிழக அரசு புளகாங்கிதமடைகிறது.இந்தத் திட்டத்திற்கு வேறு என்னென்ன விலைகள் கொடுக்கப் போகிறோம் என்பதையும் குடிமக்களாகிய நாம் பரிசீலித்தாக வேண்டும்:
முதலாவது, இவ்வளவு பெரிய தொழிற்சாலைக்கு வேண்டிய தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. ஒரு சிறிய காரை மூலப் பொருட்களிலிருந்து தயாரித்து தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு 454,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு காருக்குத் தேவையான எரிபொருளைச் சுத்திகரிப்பதற்கும், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பதற்கும் மேலும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஆக, இந்த “மறைநீரின்” (virtual water) அளவு மட்டற்றதாக இருக்கிறது. ஒரு காருக்கு இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் ஒன்றரை இலட்சம் கார்கள் தயாரிப்பதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? அந்த மாபெரும் அளவிலானத் தண்ணீர் எங்கிருந்து வரும்? தாமிரபரணி ஆற்றிலிருந்தா? அல்லது கடல்நீரைச் சுத்திகரிக்கும் ஆலைகளிலிருந்தா? இந்த தண்ணீர் பயன்பாட்டால் எழும் விவசாயப் பாதிப்புக்கள், சுற்றுச்சூழல் தாக்கங்கள் என்னென்ன?
இரண்டாவது, கார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீரை என்ன செய்வார்கள்? அதில் கலந்திருக்கும் விசப் பொருட்கள் நிலத்தடி நீரை, நீர்நிலைகளை, கடலை எப்படியெல்லாம் பாதிக்கும்? தொழிற்சாலையால் எழும் ஒலிமாசு, காற்றுமாசு போன்ற இழப்புக்களை எப்படி எதிர்கொள்வோம்?
மூன்றாவது, ஒரு கார் தயாரிப்பதற்கு உலோகங்கள், பிளாஸ்டிக், கனிமங்கள் போன்ற பல மூலப் பொருட்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. ஒன்றரை இலட்சம் கார்கள் தயாரிக்க இன்னும் ஏராளமான மூலப் பொருட்கள் வேண்டுமே? இவற்றைத் திரட்டும்போது, காடழிப்பு, வாழிடமழிப்பு, வளமழிப்பு போன்றவை நிகழுமே?
இறுதியாக, தூத்துக்குடி மக்கள் அவல் கொண்டு வருவார்கள், வியட்நாம் முதலாளி உமி கொண்டு வருவார். இரண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பார்கள். லாபம் அனைத்தும் வியட்நாம் கம்பெனிக்கு; தரகு எல்லாம் அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள் போன்ற இடைத்தரகர்களுக்கு; இழப்புக்கள் மொத்தமும் தூத்துக்குடி மக்களுக்கு! நிலத்தையும், நீரையும், கடலையும், காற்றையும், உடலையும், உயிரையும் அகர்வால்களிடமிருந்து காப்பாற்றப் போராடும் தூத்துக்குடி மக்கள் இனி வியட்நாம் முதலாளியிடமிருந்தும் காப்பற்றப் போராட வேண்டிவரலாம்? என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்