தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்
தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தில் இருந்து விமான சேவை தொடங்கியது. பயணிகளுக்கு மலர் கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
சுமார் 17 ஆயிரத்து 341 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தில் 43 மீட்டர் உயர கண்ட்ரோல் டவர், தீயணைப்பு படைக்கான புதிய கட்டிடம், 5 விருந்தினர் அறைகள், இலவச வைபை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணிகள் செக்இன் கவுண்டர்களும் உள்ளன. ஒரு மணி நேரத்தில் 1,440 பயணிகளை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து நேற்று முதல் விமான சேவை தொடங்கியது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி புதிய முனையத்தில் முதன் முதலாக வந்தடைந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு விமான நிலைய இயக்குனர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர். அதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புதிய முனையம் வழியாக விமானத்தில் புறப்பட்ட பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்துக்கள்