advertisement

ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன் நான் - ஓ.பன்னீர் செல்வம்

ஆக. 04, 2025 2:52 முற்பகல் |

 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 31ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் 2 முறை சந்தித்தார். காலை நடைபயிற்சியின்போதும், மாலை முதல்-அமைச்சரை அவரது வீட்டிற்கே சென்றும் சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைவாரா? என்றும் கேள்வி எழும்பியது.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட பதிவில்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் இல்லை. மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சரை நேரில் சென்று நலம் விசாரித்தேன். மேலும், மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவே சென்றேன். இந்த சந்திப்பை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல். என்னுடைய மனைவி, தாயார் இறந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நான் திமுகவில் இணைப்போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். முதல்-அமைச்சருடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர். முதல்-அமைச்சரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.

2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலேயே முதல்-அமைச்சரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement