கோவில்பட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் முதல்அமைச்சர் ஸ்டாலின்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்
கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம் மட்டுமின்றி, மாவட்டங்கள் தோறும் கட்சி அலுவலகங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் கடந்த 01.10.2000 அன்று அப்போதைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுகவுக்கென தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் மறைந்த மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி அவர்களால் கட்டப்பட்டு அப்போதைய முதலமைச்சரான கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகம் கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.
மேலும் நவீன தமிழகத்தின் சிற்பி என்றழைக்கப்பட்டவரும், தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவரும், தொலைநோக்குச் சிந்தனையுடன் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க இந்தியாவிலேயே முதல்முறையாக தகவல் தொழில்நுட்பத்திற்கென தனித்துறையை உருவாக்கியதுடன், டைடல் பார்க் என்று சொல்லக்கூடிய தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி தொழில்துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வெண்கல முழு திருவுருவச் சிலை கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மதுரை விமான நிலையம் வருகை தரும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவில்பட்டி சென்று மாலை 6 மணியளவில் கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் அமைந்துள்ள கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் வெண்கல முழு திருவுருவச் சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.அந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துக்கள்