கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்கிறது
கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நலச் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னர், சங்கச் செயலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து, தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் இத்தொழில் மூலம் பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மூலப்பொருளான நிலக்கடலையின் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 14,500-ஆக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயர்த்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், மொத்த விலையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 160-180 க்கு விற்பனையான நிலையில் இனி ரூ. 220க்கு விற்கப்படும். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 200-220 க்கு விற்பனையான நிலையில், இனி ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 260 வரை விற்கப்படும். இந்த விலை உயர்வு புதன்கிழமை (ஜன.28) முதல் அமலுக்கு வரும் என்றார்.




கருத்துக்கள்