advertisement

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மார். 07, 2026 4:44 முற்பகல் |

 


சாத்தான்குளம் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு தந்தை மற்றும் மகனை வெட்டிக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (II) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில், சாத்தான்குளம்  பேய்குளம் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மளவரயநத்தம் பகுதியைச் சேர்ந்த நங்கமுத்து (65) மற்றும் அவரது மகன் பொன் இசக்கி (43) ஆகிய இருவரையும், கால்வாய் பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன்களான முருகன் மற்றும் சங்கரன் (எ) சங்கரபாண்டி ஆகிய இருவரும் அரிவாளால் தாக்கிப் படுகொலை செய்தனர்.

இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் - II-ல் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, இரண்டாவது எதிரியான சங்கரன் (எ) சங்கரபாண்டி கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

மற்றொரு குற்றவாளியான முருகன் (45) மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி பிரீத்தா நேற்று தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளித்தார். அதில், கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000 அபராதம், சாட்சிகளை மிரட்டியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹2,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக ஆஜர்ப்படுத்தி தண்டனை பெற்றுத் தந்த சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் விஜயகுமார், திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் நீதிமன்றப் பணிகளுக்கு உதவிய தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதன் பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement