தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 30) காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
தேருக்கு முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், சிலம்பாட்டத்துன் வீர விளையாட்டுகளுடன் நடந்தது.
விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், கோவில் இணை ஆணையர் ரோஜாலி சுமதா, உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்