advertisement

பரமக்குடி : மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

ஏப். 29, 2026 7:37 முற்பகல் |

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோவிலில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணம் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும் , சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா மும்முரமாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.  இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் இதயப் பகுதியாக விளங்கும் பரமக்குடி நகரில் ஆயிர வைசியர்களுக்கு புராதனப் பாத்தியமான ஸ்ரீ மீனாட்சி - ஸ்ரீ சுந்தரேஸ்வராள் கோவிலில் ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, இரவு சுவாமிகள் சிம்மாசனம், கேடயம், கிளி, சிங்கம், குதிரை, வெள்ளி ரிஷபம், அன்னம், நந்திகேஸ்வரர், யானை, ரிஷப உள்பட பல்வேறு வாகனங்களில் பல்வேறு வடிவில்  எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி (செவ்வாய்) இரவு  பரமக்குடி ஆயிர வைசிய ஜவுளி வியாபாரிகள் கல்யாண மஹால் மண்டகப்படி சார்பில்  கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் ஶ்ரீ மீனாட்சிக்கும் , ஸ்ரீ சுந்தரேஸ்வரா ளுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் சிறப்புடன் நடந்தது.
         அது சமயம், மண்டபத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், இளையான்குடி, மதுரை, கும்பகோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள், பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் திருமண வைபவத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், குழுமியிருந்த பெண்கள் புதிதாக தாலி கயிறும் மாற்றி வழிபட்டனர்.
         அதனத் தொடர்ந்து, 29-ந் தேதி (புதன்) காலை சுவாமிகள் தேரில் வீற்றிருந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். இரவு பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பல்லக்கில்  ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி நாதஸ்வரம் முழங்க நகரில் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
        வரும் 01-ந்தேதி (வெள்ளி) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
         திருவிழாவையொட்டி, கோவில் வளாகம் முழுவதும் அழகிய பலவர்ண மின் விளக்குகள், டியூப் , போக்கஸ் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரமக்குடி ஆயிர வைசிய சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி, இணைத் தலைவர் ராசி என் போஸ், செயலாளர் எஸ்கேபி. இலெனின் குமார், பொருளாளர் ஏ.ஆர். சுப்பிரமணியன் உள்பட சபை துணைத் தலைவர்கள், நிர்வாகிகள், நியமன உறுப்பினர்கள், ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வராள், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் தேவஸ்தானம் பரம்பரை டிரஸ்டுகள் அம்பலம் மு.வ. பா. ஜெயராமன், த.அ.செ.ஸ்ரீ. வா. இரவீந்திரன், மானேஜிங் டிரஸ்டி ந.அ.சி.ந.சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement