advertisement

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் !

ஏப். 27, 2026 5:59 முற்பகல் |

 

சென்னை, புழல் மத்திய சிறையில் கஞ்சா பங்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைதிகளுக்கு இடையே மோதலாக வெடித்தது. இதுதொடர்பாக கைதிகள் 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என, 3 பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையினுள், தடையை மீறி கஞ்சா, மொபைல் போன் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் நேற்று முன் தினம், கைதிகளில் ஒரு தரப்பினர் கஞ்சா வைத்திருந்துள்ளனர். இதையறிந்த மற்றொரு தரப்பினர் அவர்களிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, கஞ்சாவை கொடுக்க மறுத்ததால், அவர்களுடன் எதிர்தரப்பினர் வாக்குவாதம் செய்ததாகவும் அந்த வாக்குவாதம் முற்றி, இருதரப்பு கைதிகளுக்கிடையே மோதலாக வெடித்தது. இதனையறிந்த சிறை காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, அவரவர் அறைகளுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், இருதரப்பு விசாரணை கைதிகளான ஆனந்த், சின்னத்தம்பி, ராஜேஷ், நரசிம்மன், சக்திவேல், விஜய், கணேஷ்குமார், சூர்யா, நித்தியவேல், விக்னேஷ், கேசவன், விக்னேஷ் ஆகிய 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement