advertisement

தாளமுத்து நகர் படுகொலை — சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

ஜூலை 15, 2026 6:22 முற்பகல் |

 

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் அவர்கள், ஜூலை 13 அன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கிடைத்துள்ள தகவல், மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்த சந்திரசேகர் அவர்களின் மறைவுக்கு சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது மனைவி, மூன்று பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்களது மனமார்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சந்திரசேகர் அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தை பிறந்து வெறும் 15 நாட்களே ஆனதாகக் கூறப்படுவது இந்தச் சம்பவத்தின் துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. குடும்பத்தின் பாதுகாப்பாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்த ஒருவரை இழந்து, அவரது மனைவியும் பச்சிளம் குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகளும் எதிர்கொள்ளும் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஒரு மனித உயிரை ஆயுதங்களால் கொடூரமாகப் பறிப்பது எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் செயல்கள் சமூக அமைதிக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இத்தகைய கொலைச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் காவல்துறை கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், சட்ட உரிமைகள் கழகத்தின் தலைவர் திரு. எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில், வழக்கறிஞர்கள்  ஆனந்த கதிரேசன், வெங்கடேசன், ஸ்ரீராம், அருண், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் எஸ்தர் ராஜ், உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று, காவல்துறை அதிகாரிகளிடம் சம்பவம் மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். மேலும், உயிரிழந்த சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் காவல்துறை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். குற்றத்தின் பின்னணி, முன்விரோதம், தொடர்புடைய நபர்கள் மற்றும் சம்பவத்திற்கு உதவியவர்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.  அவரது மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அல்லது நிலையான வாழ்வாதார உதவி வழங்க வேண்டும்.  மூன்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பச்சிளம் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.  குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.  வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வரை, சட்டத்திற்குட்பட்ட ஜனநாயக வழிகளில் சட்ட உரிமைகள் கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement