advertisement

தூத்துக்குடி : ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

ஜூலை 18, 2026 11:28 முற்பகல் |

 

ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 

நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சாரம் தாக்கி இறத்தல், நிலச்சரிவுகள், விலங்குத் தாக்குதல் மற்றும் சுரங்க மீட்புப் பணிகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பிறரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 'ஜீவன் ரக்ஷா பதக்' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

விருதின் பிரிவுகள் மற்றும் தகுதிகள்: இவ்விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதற்கான உயிர் காக்கும் செயல் கடந்த 2024 அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பின்னர் நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் விபரங்களை இணைக்க வேண்டும்:1. விண்ணப்பதாரரின் சுயவிவரக் குறிப்பு (Bio-Data). 2. அதிகபட்சம் 250 சொற்களுக்குள் அமைந்த சம்பவ விபர அறிக்கை. 3. சம்பவத்தின் வரிசைமுறை, மீட்பாளரின் உடனடி செயல்பாடு, உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து மற்றும் ஆற்றிய பங்களிப்பு குறித்த தெளிவான விபரங்கள். 

முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை வரும் 27.07.2026-க்குள், "மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101" என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். 
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement