ஆந்திரா : ஆம்னி பேருந்து தீப்பற்றி விபத்து: 20க்கும் மேற்பட்டோர் பலி!
ஆந்திர பிரதேசத்தில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
(அக்.23) இரவு ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 39 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை இந்த பேருந்தானது ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44இல் உலிந்தகொண்டா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று பேருந்தின்மீது மோதிய வேகத்தில், பேருந்தின் அடியில் சென்று எரிபொருள் டேங்க்கின்மீது மோதியது. இதனால் பேருந்தில் தீப்பிடித்தது. இந்த சத்தம் கேட்டு பேருந்துக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்துள்ளனர். சிலர் பேருந்தை விட்டு வெளியே ஓடிய நிலையில் பலர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அதற்குள் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதில் பலர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி கர்னூல் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 12 பேர் தீக்காயங்களுடன் தப்பி இருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் உடல் கருகி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.





கருத்துக்கள்