advertisement

ரயிலில் கிடைத்த ஒடிசா பெண்ணின் சடலம்:  - தலையை தேடும் போலீஸ்!

ஆக. 22, 2026 4:35 முற்பகல் |

 

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ஒரு பொதுப்பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இவ்வழக்கில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் தமிழக ரயில்வே போலீசாரின் உதவியை நாடினர். தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

பல மணி நேரம் நடைபெற்ற தீவிர ஆய்வில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணித்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்கு வந்தது பதிவாகி இருந்தது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், மீண்டும் எங்கே போனார்கள் என ஆய்வு செய்தபோது, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி தெரு பகுதிக்குச் சென்ற காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன.இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோவின் தடத்தைப் பின்தொடர்ந்த போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை அடையாளம் கண்டு, அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் வீட்டு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அவர்கள் சந்தேகித்தது போலவே அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கொலைக்கு பின்னர் உடலை மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, உடலை துண்டித்து அதில் எலும்புகளை தனியாகப் பிரித்து சூட்கேஸில் அடைத்து ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மீதமிருந்த உடல் பாகங்களை அழித்து தடயங்களை மறைப்பதற்காக பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்ணின் தலை இதுவரை கிடைக்காததால், அது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement