ஒன்பது துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்ற நிலையில், இன்று மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'அர்னாப்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இது வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாகவும், மிக தீவிர புயலாகவும் வலுவடைந்து ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நாளை மறுநாள் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்க கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.





கருத்துக்கள்