advertisement

வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

செப். 28, 2026 4:18 முற்பகல் |

 

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.

வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகளை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 11-ம் தேதி முதல்கட்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிப்பது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்க உயர்மட்டக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், செப்டம்பர் 28-ம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement