advertisement

தங்க நகைக் கடன்- ஆர்பிஐ., க்கு இந்த விஷயம் தெரியாதா? - விஜய் கேள்வி!

மே 24, 2025 4:34 பிற்பகல் |

 

தங்க நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி, விவசாயம், மருத்துவம் என அத்தியாவசிய செலவுகளுக்காகவே மக்கள் வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். நகைகளை வாங்கிய ரசீது இல்லாதவர்கள், அதற்கு பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்து கடன் பெறலாம் என்றும் அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதால் நகைக் கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும்.ஏனெனில் பாட்டியின் நகைகள் மகளுக்கு அதற்குப் பிறகு மகள், மருமகள்களுக்கு வழங்கப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் போது அவற்றிற்கான ரசீதுகளையோ, ஆவணங்களையோ அவர்கள் எங்கு சென்று பெற முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துகொண்டு இருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்து பெறப்படும் தொகை குறைந்துகொண்டே போனால், மக்கள் கடுமையாக சிரமப்படுவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்கு தெரியாதா என்று வினா எழுப்பிய விஜய், “தங்க நகை கடன் வழங்கும் மதிப்பும் 75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிறுவனங்களையும், கந்து வட்டி கும்பலையுமே நாடிச் சென்று நகை அடகு வைக்கும் சூழல் உண்டாகும். இதனால் ஏழை, எளிய மக்கள் மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளை முழுவதும் திரும்பப் பெற வேண்டும். நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement