advertisement

கேடான ஆட்சிக்கு கூட்டாட்சி தத்துவம் கேடயமா? கிருஷ்ணசாமி கேள்வி

மே 24, 2025 4:52 பிற்பகல் |

 

கேடான ஆட்சிக்கு கூட்டாட்சி தத்துவம் கேடயமா? என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேளிவி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் விரிவான அறிக்கையில், "​திமுக ஆட்சியில் நடைபெறும் அபரிமிதமான மணல் கொள்ளையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சமன் அனுப்பினால் மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு!கனிம வள கொள்ளையை ஆய்வு செய்யச் சென்றால் மாநில சுயாட்சியில் தலையீடு!ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்து, ஆயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றால் மனித உரிமை மீறல்! மாநில அதிகாரத்தில் தலையீடு!!
இதையே வாடிக்கையாகக் கொண்டு திமுக கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றங்களை அரசியல் தளங்களாக பயன்படுத்தி வருகிறது.

ஆட்சி - அதிகாரங்கள் கிடைத்தவுடன் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்டு மக்களைச் சுரண்டுவதையும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதையும் பெரும்பாலான மாநில அரசுகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து சாதாரண மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மாநில அரசின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு பிரிவு ஒரு நாளாவது இது போன்ற ஒரு ஊழலையாவது தடுக்க நடவடிக்கை எடுத்ததுண்டா?

அல்லது எடுக்கத்தான் முடியுமா? அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளையும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என நீதிமன்றங்கள் முடக்கிப் போட்டால் வரும் காலங்களில் குற்றவாளிகள் தடயங்களை அழிக்கவும், தப்பித்துக் கொள்ளவும் மட்டுமே அவை வழி வகுக்கும். மீண்டும் உண்மையை வெளிக்கொணர வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இந்திய அரசியல் சாசனம் வெற்றுக் காகிதத்தால் ஆனதல்ல! அது கோடான கோடி மக்களின் உயிரோட்டம்; எண்ண பிரதிபலிப்பு; கொள்கை கோட்பாடு; நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றின் வெளிப்பாடு. இதைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றங்கள். ஆனால், நேர்மையற்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டித்து ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக நீதிமன்றங்களை பயன்படுத்தியே குற்றம் புரிந்த அரசியல்வாதிகள் தப்பிப்பார்களேயானால், ஏழை எளிய மக்கள் எங்கே சென்று நீதியைப் பெறுவார்கள்?

எப்படி நீதியை நிலைநாட்டுவார்கள்? ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் மனசாட்சியோடும், மக்களோடும் இணைந்து இந்திய அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என என்பதே ஜனநாயகவாதிகள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement