கானம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கானம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.51,95,053 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், கானம் கிராமத்தில் நேற்று (24.05.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.51,95,053 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும் போது தெரிவித்ததாவது: பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களாகிய நீங்கள் அரங்குகளை பார்வையிட்டு தங்களது தொழில் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது.
பொதுமக்கள், பெரியோர்கள் எல்லோரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை வாயிலாக மருத்துவர்களிடம் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இம்மருத்துவ முகாமில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான நோய்கள் கண்டறியப்படுபவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர்களிடம் முறையாக கேட்டறிந்து தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, அரசின் பல்வேறு துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளில் இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், கானம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர்.வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்