advertisement

கமல்ஹாசன் பேச்சால் ’தக் லைஃப்’ படத்திற்கு சிக்கல்!

மே 28, 2025 9:05 முற்பகல் |

 

 ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், கன்னட மொழி குறித்து கூறிய கருத்திற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த சனிக்கிழமை (மே 24) சென்னையில் ’தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கமல்ஹாசன் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் குறித்தும் தனித்தனியே பேசினார்.

மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “என்னுடைய படங்களைப் பார்த்து பாரட்டக்கூடியவர் ராஜ்குமார். யாரை பார்த்தாலும் என்னை அறிமுகப்படுத்தி பாராட்டக்கூடியவர். ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார்.

அதனால்தான் என்னுடைய பேச்சை ஆரம்பிக்கும்போது நான் ‘உயிரே உறவே தமிழே’ என்று ஆரம்பித்தேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் உங்கள் (சிவராஜ்குமார்) பாஷையும். நீங்களும் அதில் உட்படுவீர்கள்: என பேசியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.

ஆனால் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறும்போது, "தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

இதுகுறித்து கர்நாடக மாநிலம் பாஜக தலைவர் வி.ஒய். விஜயேந்திரா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “கன்னடம் குறித்து கமல்ஹாசனின் பேச்சு அவரது ஆவணத்தையே காட்டுகிறது. நாகரீகமற்ற நடத்தையை காட்டுகிறது. நடிகர்கள் எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும். தமிழை பாராட்ட நடிகர் கமல், கன்னடத்தை அவமதித்துள்ளார்.

கன்னடம் 2500 ஆண்டுகள பழமையானது. கமல்ஹாசனின் இந்த பேச்சு 6.5 கோடி கன்னடர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அவர் இந்து மதத்தையும் ஆன்மீக சடங்குகளையும் அவமதித்துவிட்டார். எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.கமல்ஹாசனின் இந்த கருத்து ’தக் லைஃப்’ படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடாகாவில் ’தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை இது பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement