advertisement

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக -அதிமுக கவுன்சிலர்கள் மோதல்!

மே 29, 2025 10:21 முற்பகல் |

 

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று (மே 29) நடைபெற்றது. மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன், ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது வார்டுகளில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

அப்போது, மாமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக கவுன்சிலருமான யாதவ மூர்த்தி தனது வார்டில் உள்ள பிரச்னைகளை முன் வைத்து பேசினார். அப்போது, தனது வார்டில் உள்ள டெண்டர்கள் அமைச்சர்களின் சிபாரிசு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டி பேசினார்.

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அருகில் அமர்ந்திருந்த 38-ஆவது வார்டு கவுன்சிலரான இளங்கோ மிக்சர் பாக்கெட்டை எடுத்து அவர் மீது வீசினார். இதனால், ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், 48-ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சுகாசினி, அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தியை கடுமையாக தாக்கினார். இதனால், இருவரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது, இரு கட்சியின் கவுன்சிலர்கள் இடையே கடும் மோதலாக மாறியது.

இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை அடுத்து, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையர் ஆகியோர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனிடையே, அதிமுக கவுன்சிலர் தாக்கியதில் காயமடைந்ததாக திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிமுக வார்டு உறுப்பினர்கள் போராட்டம்
இந்த நிலையில், திமுக கவுன்சிலர் சுகாசினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இருக்கை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக வார்டு உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தாக்கக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement