advertisement

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமையுங்கள் - அன்புமணி

ஜூன் 30, 2025 6:23 முற்பகல் |

 

நடப்பு திமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை வரும் டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்குமாறு மாநில அரசை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும்.


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 380) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும்; திண்டுக்கல் மாவட்டத்தைத் பிரித்து பழனி மாவட்டம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட ஏற்படுத்தப்படவில்லை.

பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்; அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement