சென்னை அருகே 7 வயது மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற கொடூர தொழிலாளி
7 வயது மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று பெண் ஒருவர் வந்த நிலையில், தனது தம்பியான சென்னை அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) என்பவர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளதாகவும். அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர் இது குறித்து விசாரித்த போது, சதீஷ்குமார் என்பவர் அவரது 7 வயது குழந்தையுடன் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கி இருந்ததை அறிந்தார்.
உடனே அறைக்கு சென்று பார்த்த போது, சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகில் அவரது குழந்தை ஸ்டெபி ரோஸ் (7) கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாருக்கும் ரெபேக்கா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடப்பதாக கூறப்படுகிறது.
எனவே தனது 7 வயது மகள் ஸ்டெபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி ரெபேக்கா அவரது கணவர் சதீஷ்குமார் மீது போலீசில் புகார் செய்து உள்ளார். இதனால் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில், ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகள் ஸ்டெபியை அழைத்து தங்க வைத்த சதீஷ்குமார், மகள் ஸ்டெபியின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தியதுடன் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.மேலும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீசை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சதிஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியை கொன்ற தந்தை சதீஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்