கள்ளக்காதலுக்காக, மகன், மகளை கொலை செய்த அபிராமிக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலுக்காக, மகன், மகளை கொலை செய்த இளம்பெண் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இளம்பெண் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இளம்பெண் அபிராமி, தாய் தந்தை வயதானவர்கள். ஏற்கனவே ஏழு வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்