ஆடி அமாவாசை; பூசாரிக்கு 108 கிலோ மிளகாய் தூள் கரைசல் அபிஷேகம்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நடப்பனஹள்ளி பெரிய கருப்பசாமி கோயில் பூசாரிக்கு, 108 கிலோ மிளகாய் தூள் கரைசல், 6 கிலோ பச்சை மிளகாய் கரைசல் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் ஆடித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாதம் பிறந்தவுடன் கோயிலில் கொடியேற்றப்பட்டு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில், நடப்பனஹள்ளி பெரிய கருப்பசாமி கோயிலில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நேற்று கோலாகலமாக நடைபெற்றன.கோயில் முன்பாக பல்வேறு பூஜைகள் செய்து, கோயில் பூசாரி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு, 11 படிக்கு பூஜைகள் செய்து கத்தி மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அருள்வாக்கு கேட்டனர். பின்னர், மூலவர் கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கலிட்டும், ஆடு, கோழி, மது, சுருட்டு மற்றும் மிளகாய் உள்ளிட்டவைகளை வைத்தும் பூஜைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து, அங்கு பெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டிருந்த 108 கிலோ மிளகாய் தூள் கரைசல், ஆறு கிலோ பச்சை மிளகாய் கரைச்சல் என 114 கிலோ மிளகாய் கரைசலை கோயில் பூசாரி மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந் நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.
கருத்துக்கள்