advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு: தவறை மு.க.ஸ்டாலின் உணர்வாரா? - அன்புமணி கேள்வி

ஜூலை 26, 2025 6:30 முற்பகல் |

 


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிடவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தமது தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு.


டெல்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி மாநாட்டில் பேசும் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கும் இன்னொரு தகவல் மிகவும் முக்கியமானது. "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததும் ஒரு நல்ல தவறு தான். அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், தெலுங்கானா மாநிலத்தில் இப்போது நடத்தப்படிருப்பது போன்ற சமூகத்தின் எக்ஸ்ரே பதிவைக் காட்டக்கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்க முடியாது" என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். தமிழகத்தின் கோணத்தில் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது.

இந்தக் கருத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டுவரக்கூடியது; அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதல்-அமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன். விவாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அவரது அமைச்சர்களோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்த எவருமோ பங்கேற்கலாம். வெகு விரைவில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். முதல்-அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement