advertisement

திண்டுக்கல் உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்.

ஜூலை 25, 2025 11:04 முற்பகல் |

 

திண்டுக்கல்லில் கடை வாடகை பணத்தை கேட்ட உரிமையாளரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (53). இவருக்கு திண்டுக்கல் - திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே கறிக்கடை உள்ளது. இந்த கறிக்கடையை பாண்டியராஜன் தனது உறவினர் நாகபாண்டி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். நாகபாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக கடைக்கு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கறிக் கடையை காலி செய்யுமாறு பாண்டியராஜன் நாகபாண்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. மேலும், இது குறித்து பாண்டியராஜன் ஏற்கனவே இரண்டு முறை காவல் நிலையத்தில் நாகபாண்டி மீது புகாரும் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 24) நள்ளிரவு 12.30 மணியளவில் பாண்டியராஜன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது.

அதை கண்டு பதறி போன பாண்டியராஜன் சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு எதிரில் நின்று கொண்டிருந்த நாகபாண்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டி, ''உன்னை கொல்லாமல் விடமாட்டேன்'' என்று கூறி விட்டு ஓடி விட்டார். இது தொடர்பாக பாண்டியராஜன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசர் வழக்குப்பதிவு செய்து நாகபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement