கேரளா: சிறையில் இருந்து தப்பிய தமிழக குற்றவாளியை பிடித்த போலீசார்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார். சவுமியா பயணித்த ரெயில் பெட்டியில் அவர் மட்டும் தனியாக பயணித்துள்ளார்.
அப்போது, சவுமியா பயணித்த ரெயில் பெட்டியில் ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30) தனியாக இருந்த சவுமியாவை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூரத்தில் இருந்து தப்பிக்க சவுமியா ரெயில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் கோவிந்தசாமியும் ரெயிலில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சவுமியாவை தண்டவாளம் அருகே வைத்தும் கோவிந்தசாமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷர்னூர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சவுமியா மீட்கப்பட்டார். அவர் திரிச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 2011 பிப்ரவரி 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் கேரளாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய நிலையில் குற்றவாளி கோவிந்தசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளி கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மரண தண்டனை பின்னர் ஆயுத தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளி கோவிந்தசாமி கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி இன்று அதிகாலை 6.30 மணியளவில் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், பொதுமக்கள் கூறிய தகவல் அடிப்படையிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்
இறுதியில் 3.30 மணிநேர தேடுதல் வேட்டைக்குப்பின் கன்னூரின் தலப்பு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கிணற்றுக்குள் பதுங்கி இருந்த கோவிந்தசாமியை போலீசார் பிடித்தனர். கிணற்றுக்குள் பதுங்கி இருந்த கோவிந்தசாமியை அதிரடியாக கைது செய்த போலீசார் அவரை மீண்டும் கன்னூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துக்கள்