விஜயகாந்த் பென்சன் பணம் குறித்த சர்ச்சை : கலங்கி பேசிய பிரேமலதா!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பின், தமிழக அரசு வழங்கும் எம்எல்ஏ பென்சன் தொகை குறித்து எழுந்த சர்ச்சைக்கு, அவரது மனைவி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
2006 முதல் 2016 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த விஜயகாந்த், சட்டப்படி பென்சன் பெறும் உரிமை பெற்றிருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, விதிமுறைப்படி அவரது மனைவிக்குப் பென்சன் வழங்கப்படுகிறது.
இதற்காக பிரேமலதா விண்ணப்பித்ததை தொடர்ந்து, “விஜயகாந்த் குடும்பம் மாதம் ரூ.15 ஆயிரம் பென்சன் பெற்று வருகின்றனர்” என்ற செய்திகள் வெளியானது. இதனை வைத்து சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:“விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்த போது, அவர் பெற்ற சம்பளம் மக்களால் வழங்கப்பட்டது. அதேபோல், அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் பென்சனும் மக்களால் வழங்கப்பட்ட சன்மானம். எந்த ஆட்சியாக இருந்தாலும், இதனை வழங்குவது அரசின் கடமை.”
“அந்த ரூ.15 ஆயிரம் தொகை நேரடியாக ‘வள்ளல் விஜயகாந்த் டிரஸ்ட்டிற்கு’ செல்கிறது. அதன் மூலம் ஏழை மக்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். ஆனால் இதனை புரியாமல், சிலர் தவறான விஷயங்களை பரப்புகின்றனர்.”
மேலும் அவர் கூறியதாவது:“விஜயகாந்த் மறைந்து 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் தினசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை உணவு அளிக்கப்படுகிறது.
ஓராண்டு கழித்து இந்தப் பென்சன் விஷயத்தைப் பற்றி சிலர் பூதாகரமாக்குவது வருத்தமளிக்கிறது.விஜயகாந்த் வாழ்நாள் முழுவதும் செய்த நலத்திட்ட உதவிகளைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ஒரு பென்சனை வைத்து தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என கூறினார்.
கருத்துக்கள்