ரூ.634 கோடி முறைகேடு புகார்? - நடிகை ஷபானா விளக்கம்
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனுடன் தொடர்புபடுத்தி சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜகானின் பெயரும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு நடிகை ஷபானா தற்போது கடுமையான கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரூ.634 கோடி முறைகேடு புகார் தொடர்பாக தனது பெயரும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதாக எந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? தனக்கும் இந்தப் புகாருக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் என்ன? தனது பெயரை முதலில் இந்த விவகாரத்தில் இணைத்தது யார்? எந்த அடிப்படையில் இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள ஷபானா, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்று தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு கொண்டவர்கள் கவலைப்பட்டு விசாரித்து வருவதால், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரமுகர் மீதான ரூ.634 கோடி முறைகேடு புகாரில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவதற்கு நடிகை ஷபானா ஷாஜகான் தெரிவித்துள்ள இந்த எதிர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.






கருத்துக்கள்