ராமநாதபுரம் உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகளுக்கான வாரச் சந்தை-அமைச்சர் திறந்து வைப்பு
ராமநாதபுரம் உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகளுக்கான வாரச் சந்தையினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தொடங்கி வைத்தார் .
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் வேளாண்மை விற்பனை , வேளாண் வணிகத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை நிலையத்தினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் அவர்கள் தொடங்கி வைத்து, முதல் விற்பனையை மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து பயன்பெறும் வகையிலும் ராமநாதபுரம் , பரமக்குடி உழவர் சந்தைகளில் இயற்கை விவசாயிகளுக்கான வாராந்திர விற்பனை சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாரச் சந்தையின் மூலம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து உரிய விலை பெற்றிட வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், பொதுமக்கள் தரமான இயற்கை வேளாண் விளைபொருட்களை நியாயமான விலையில் வாங்கிப் பயன்பெறவும் இச்சந்தை செயல்படுகிறது.
இதன் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்கள் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகளுக்கான வாரச் சந்தையானது ராமநாதபுரம், பரமக்குடி உழவர் சந்தைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தமிழ்நாடு
சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து , ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைகளின் தூய்மை , பராமரிப்பு நிலையை ஆய்வு செய்ததுடன், அங்கு செயல்பட்டு வரும் கடைகளையும் பார்வையிட்டார். மேலும், பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் வருகை தரும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, கழிப்பறைகளை முறையாகத் தூய்மையாகப் பராமரித்தல், பேருந்து நிலைய வளாகத்தைச் சுகாதாரமான முறையில் வைத்திருத்தல் , பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், வேளாண் வணிகம் வேளாண்மை துணை இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் , உழவர் சந்தை நிர்வாக அலுவலர் (பொ) சபிதா பேகம் , செய்தி -- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலிதளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.






கருத்துக்கள்