advertisement

ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும்- ராமநாதபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

நவ. 02, 2026 5:51 முற்பகல் |

போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டத்தில்,ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஒருங்கிணைந்து ஆலோசித்து நிறைவேற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார் .

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சியில்  ஊரக வளர்ச்சி , ஊராட்சித் துறையின் சார்பில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது :
          கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் , வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்து, தங்களது தேவைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றுவதாகும். 
       எனவே, ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் பொதுமக்கள் முழுமையாகப் பங்கேற்று, தங்கள் கிராமத்திற்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளைத் தேர்வு செய்து, அவற்றைத் தீர்மானங்கள் மூலம் நிறைவேற்றி முன்வர வேண்டும். கிராம சபையில் முன்மொழியப்படும் திட்டங்கள் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், தனிநபர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
        எனவே, பொதுமக்கள் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று தங்களது கிராமத்தின் வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
      தொடர்ந்து, கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் அமைத்தல், சேதமடைந்த சிறுபாலங்களைச் சீரமைத்தல், நூலக வசதிகளை மேம்படுத்துதல் , மயானத்திற்குச் செல்லும் பாதையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
      இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தருவது தொடர்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
          மேலும், சேதமடைந்த சிறுபாலத்தைச் சீரமைப்பது தொடர்பாகவும், கிளை நூலகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மயானத்திற்குச் செல்லும் பாதையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில், வளர்ச்சி  கூடுதல் ஆட்சியர்  திவ்யான்ஷீநிகம் , பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி,, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் பாபு , பயிற்சி துணை ஆட்சியர் ர.சினேகா , மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , செய்தி -- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள்,  அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement