பவானியில் பெண் மரணம் - கணவன் கொலை செய்தது அம்பலம்!
ஈரோடு மாவட்டம் பவானியில் பெண் மரணத்தில் திடீர் திருப்பமாக, மனைவியின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் செல்வம் மகன் கார்த்தி (வயது 23). லாரி கிளீனர், இவர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரபா (38) என்ப வரை காதலித்தார்.இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் 2 பேரும் பவானி மேற்கு தெரு 2வது வீதியில் வசித்து வந்தனர். திருமணத் துக்கு பின்னர் கார்த்தி கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சூரிய பிரபாவை கார்த்தி தாக்கியதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் காலை எழுந்திருக்காததால் சூரியபிரபாவை தூக்கிக்கொண்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கார்த்தி சென்று உள்ளார்.
இது குறித்து போலீசார் விரைந்து சென்று சூரிய பிரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்ததுடன், கார்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், கார்த்தி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு, சூரிய பிரபா என்னை விட 15 வயது அதிகமானவர். ஏற்கனவே திருமணமாகி அவர் விவாகரத்து செய்த வர். ஆனால் இதை மறைத்து என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் என் மீது சந்தேகப்பட்டு ஒவ்வொரு முறையும் என்னுடைய செல்போனை வாங்கி பார்ப்பார். அப்போது நான் பல பெண்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து தினமும் சண்டை போட்டு வந்தார். இதனால் ஆத்திரத்தில் மனைவியை தாக்கியதுடன், அவருடைய முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியதுடன் கார்த்தியையும் கைது செய்தனர்.
கருத்துக்கள்