advertisement

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்க கோரிக்கை

அக். 18, 2026 10:04 முற்பகல் |

 

நாகர்கோவில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியத்தின் அடிப்படையில் 40 சதவீத போனஸ், கூடுதல் கருணைத்தொகை மற்றும் பணித்திறன் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும், தீபாவளியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து, அன்றைய தினத்திற்கான முழு ஊதியத்தையும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என நாம் தமிழர் தொழிற்சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் வருவாயில் முக்கிய பங்காற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், பணிச்சுமை மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில், 40 சதவீத போனஸ், கருணைத்தொகை மற்றும் பணித்திறன் ஊக்கத்தொகையை அரசு அறிவிக்க வேண்டும்.

பண்டிகைக் காலங்களிலும் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் காரணமாக, பணியாளர்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாமல் உள்ளனர். எனவே, அவர்களின் குடும்ப மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு, தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாளுக்கான ஊதியம் குறைக்கப்படாமல் வழங்கப்படுவதுடன், பணியாளர்களுக்கு மாற்றுப் பணிச்சுமை ஏற்படாத வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுபான விற்பனையால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு விரிவுபடுத்த வேண்டும். குடும்ப நலன், பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை முன்னிறுத்தி, படிப்படியாக மதுவிலக்கை நோக்கிச் செல்லும் கொள்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர்களின் உரிமைகள், குடும்ப நலன் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கான போனஸ், ஊக்கத்தொகை மற்றும் தீபாவளி விடுமுறை தொடர்பான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வரை நாம் தமிழர் தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement