எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது - உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருவள்ளூர் மற்றும் தென்காசிக்கு தலா 2 ஆயிரம் டன் வீதம் சரக்கு ரெயிலில் தலா 42 வேகன்களில் அனுப்பப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பின்னர் நெல் கொள்முதல் குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கேட்டறிந்தார்.
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார். அவரின் எண்ணம் தஞ்சை மண்ணில் ஒருபோதும் எடுபடாது. தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க, முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லியுள்ளார்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்னும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவிற்கு இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தவறானது.இவ்வாறு அவர் கூறினார்.





கருத்துக்கள்