தருமபுரி : வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்புத்துறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இதனால் அக்டோபர் 16ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.
அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் ரித்திக் (15). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றபோது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்படி, மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேரம் போக போக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறுகள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





கருத்துக்கள்